சென்னை டி.பி.சத்திரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் காவலர் ஜான் பிரிட்டோ. அதே குடியிருப்பில் வசித்து வருபவர் கார்த்திகேயன்( 40). இவர் நுண்ணறிவு பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர்கள் இருவரும் சட்ட விரோதமாக காவலர் குடியிருப்பில் மதுபானங்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இதனைக் கண்ட அதே குடியிருப்பைச் சேர்ந்த (வேப்பேரி காவல் நிலையம்) காவலர் வெங்கடேஸ்வர ராவ்(45), அவர்களிடம் மதுபானம் விற்கக்கூடாது எனக் கண்டித்து வந்துள்ளார்.
ஆனால், அவரது பேச்சை மீறி இருவரும் மதுபானம் விற்று வந்துள்ளனர். இந்நிலையில் காவலர்கள், ஜான் பிரிட்டோ, கார்த்திகேயன் ஆகிய இருவரும் பணி முடிந்து வீட்டிற்கு வந்த வெங்கடேஸ்வர ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது, ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த வெங்கடேஷ்வர ராவை மீட்டு, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக சட்டவிரோதமாக மதுபானம் விற்று தன் மீது தாக்குதல் நடத்திய இரு காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி டிபி சத்திரம் காவல் நிலையத்தில் வெங்கடேஷ்வர ராவ் புகாரளித்தார். அதனடிப்படையில், உயர் அலுவலர்கள் சம்பவம் நடந்த இடத்தில் வெளியான வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஒசூரில் இருவருக்கு கரோனா பாதிப்பு - மாவட்டத்தில் 20ஆக உயர்வு