சென்னை: பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் 28 சிசிடிவி கேமராக்களுடன் புதிகாக அமைக்கப்பட்ட காவல் உதவி மையம், கண்காணிப்பு கோபுரம் மற்றும் மெரினா கடற்கரையில் உள்ள 4 காவல் உதவி மையங்களை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சென்னை கடற்கரைப் பகுதிகளில் எடுக்கப்பட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது கடலில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக மெரினாவில் உயிர் காக்கும் பிரிவு தொடங்கப்பட்டது. ட்ரோன் கேமராக்கள் மூலம் கடற்கரையை கண்காணிப்பது, மெரினா பேட்ரோல் என தொடர்ந்து காவலர்களை கண்காணிப்பு ரோந்து பணியில் ஈடுபட வைத்ததன் காரணமாக இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
விரைவில் ட்ரோன் காவல் நிலையம் தொடங்கப்பட உள்ளது. 9 ட்ரோன் கேமராக்களுடன் சென்னை பிரதான கடற்கரை பகுதியான மெரினா மற்றும் பெசன்ட் நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் காவலர்கள் ஈடுபட உள்ளனர். அதன் மூலம் மேலும் உயிரிழப்பு மற்றும் குற்றங்கள் குறையும்'' என்று தெரிவித்தார்.
பெசன்ட் நகர் கடற்கரையைப் பொறுத்தவரை சாலையிலும், மணற்பரப்பிலும் 28 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் உதவி மையம் மூலம் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். காணும் பொங்கல் விழாவையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
சென்னையில் காணும் பொங்கல் விழாவையொட்டி கடற்கரையில் 1200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் மெரினா கடற்கரை மணல்பரப்பில் குதிரைப்படை மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் 4 காவல் உதவி மையங்கள் அமைத்து கண்காணிக்க உள்ளதாகக் கூறினார்.
பெற்றோருடன் வரும் குழந்தைகள், கடற்கரை மணல் பரப்பில் காணாமல் போகும் பட்சத்தில் உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆளுநர் குறித்து பேசிய திமுக நிர்வாகி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பு காவல்துறை தரப்பில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: Good time for pongal:பொங்கல் வைப்பதற்கு உகந்த நேரம் எது?: விளக்கமளிக்கிறார் பிரபல ஜோதிடர்!