சென்னை: நடப்பாண்டுக்கான ஜி 20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்று உள்ளது. வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உலக அளவிலான வெளியுறவு அமைச்சர்கள், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் முக்கிய நகரங்களில் பல்வேறு கட்டங்களாக ஜி 20 உச்சி மாநாட்டின் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் புதுச்சேரி, மகாபலிபுரம், கோவை ஆகிய இடங்களில் ஜி 20 கருத்தரங்கு நடைபெற்று உள்ளது. தற்போது சென்னையில் 2-வது கட்ட கருத்தரங்கு நிகழ்ச்சி வரும் வெள்ளி (மார்ச் 24), சனி (மார்ச் 25) ஆகிய 2 நாட்கள் கிண்டியில் உள்ள ITC Grand Chola என்ற தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது.
இதில் 29 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பிரதிநிதிகள், 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந்த கருத்தரங்கில் பங்கேற்கும் பிரதிநிதிகள் ஓட்டல் ரமடா பிளாசா, ஓட்டல் ஹப்ளீஸ், ஓட்டல் பார்க் ஹையாத் ஆகிய ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த மாநாட்டை தொடர்ந்து பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை கருதி சென்னையில் ட்ரோன்கள் பறக்க விட காவல் துறை தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக காவல் துறை தரப்பில், 22-3-2023 முதல் 25-3-2023 வரையில் வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கி உள்ள ஓட்டல்கள், கருத்தரங்கு நடைபெறும் ஓட்டல் மற்றும் அவர்கள் செல்லும் வழித்தடங்களை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இடங்களில் வழக்கமான பாதுகாப்பை காட்டிலும் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
சிவப்பு மண்டலமாக அரிவிக்கப்பட்டுள்ள இந்த பகுதிகளில் டிரோன்கள், இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறப்பதற்கு மார்ச் 25 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.