சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் கடந்த 18ஆம் தேதி 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போக்குவரத்து துணை ஆணையர் ஓம் பிரகாஷ் மீனா ஆலோசனையின் படி மெரினா, பூக்கடை, ராயப்பேட்டை, மயிலாப்பூர், சாஸ்திரி நகர், அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உள்ளிட்ட காவல் நிலைய போலீசார் பைக் சாகச கும்பலை பிடிக்க விசாரணை நடத்தினர். குறிப்பாக மெரினா கடற்கரை சாலையில் வீலிங் செய்யும் போது பதிவான 50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
3 பேர் கைது
அதில் பைக்கில் அதிவேகமாக செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றினர். இருசக்கர வாகன பதிவு எண்களை வைத்து பெரம்பூர் பகுதியை சேர்ந்த முகேஷ் (20), ரோமன்ஸ் அல்கிரேட் (24), ஹரிகரன் (21) ஆகிய மூன்று பேரை மெரினா காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவான 308- கொலையாகாத மரணம் விளைவிக்கும் குற்றத்தை செய்ய முயற்சித்தல் மற்றும் அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து நான்கு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதே போல நேற்று (மார்ச் 20) இரவு மயிலாப்பூர் ஆர்கே சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டிச் சென்ற 14 கல்லூரி மாணவர்களை ராயப்பேட்டை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். விசாரணைக்கு பிறகு 14 கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏழு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. பிறகு அவர்களது பெற்றோரை வரவழைத்து காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
லைக்குக்காக மட்டுமே பைக் வீலிங்
மேலும் பூக்கடை மற்றும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலைய பகுதியிலும் சில பேரை பிடித்து விசாரணை செய்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மெரினாவில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று இளைஞர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சுவாரஸ்ய தகவல் வெளியானது. சென்னை முழுவதும் குழு குழுவாக பிரிந்து மெரினா கடற்கரை மற்றும் ஈசிஆர் சாலையில் வீலிங் செய்து வருவதாகவும், வீலிங் செய்வதை படம் பிடித்து சமூக வலைதளங்களில் லைக்குக்காக பதிவிடுவதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக மெரினா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சென்னையில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதே போன்று பைக் வீலிங்கில் ஈடுபடுவதாகவும், ஈசிஆர், ஓஎம்ஆர், மெரினா போன்ற பிரதான சாலைகளில் எந்த நேரங்களில் சாகச பயிற்சியில் ஈடுபட வேண்டும் என வாட்ஸ் அப் குழு மூலமாக பகிர்ந்து வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சமூக வலைதளங்களில் லைக்குக்காக மட்டுமே பைக் வீலிங்கில் ஈடுபடுவதாகவும், பந்தயங்களில் இந்த கும்பல் ஈடுபடவில்லை எனவும் மெரினா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கும்பலில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் உள்ளனர். லைசென்ஸ் இல்லாமல் பைக் வீலிங்கில் ஈடுபடுகின்றனர் எனத் தெரிவித்தனர். மேலும் வாட்ஸ் அப் குழு மூலமாக இந்த நெட்வொர்க்கை பிடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சீன விமான விபத்தில் 133 பயணிகள் உயிரிழப்பு?