சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, சிங்கார தோட்டம், காவலர் குடியிருப்பில் வசித்து வரும் 32 வயதுடைய காவலர் ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் குடியிருக்கும் அதே குடியிருப்பிில் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இவரும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது, இவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில், கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போல் சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது காவலருக்கும், கூடுதல் தலைமையக அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்து வரும் ஆயுதப்படை காவலருக்கும், கரோனா கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்து வரும் பெண் ஆயுதப்படை காவலருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வரும் 52 வயது போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் எழும்பூர் பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சூளைமேடு காவல் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள, நுங்கம்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் 38 வயது காவலருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலர் ஒருவருக்கும், அம்பத்தூரில் போக்குவரத்து காவலர் ஒருவருக்கும், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலருக்கும், எம்.எம் காலனி காவல் நிலையத்தில் காவலர் ஒருவருக்கும் மற்றும் சூளைமேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
அதேபோல், கியூ பிரிவில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வரும் காவலர் மற்றும் ஆவடியில் உள்ள எஸ்.எம் நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் காவலருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 116 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அறிகுறியின்றி டெல்லியில் பரவும் கரோனா - கெஜ்ரிவால்