சென்னை, போரூர் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த தம்பதி யோகேஷ் குப்தா - தான் தனலட்சுமி. இவர்களில் 27 வயது நிரம்பிய தனலட்சுமிக்கு பதினோரு மாதங்களுக்கு முன் வடபழனி விஜயா மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
அப்போது குழந்தை பிறந்த பின் தனலட்சுமிக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் (செப்.25) தனலட்சுமி வடபழனியிலுள்ள விஜயா மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார். அப்போது வயிற்றில் பிரச்னை உள்ளதால் டி&சி சிகிச்சை மேற்கொண்டு சரி செய்து விடலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, நேற்று (செப்.26) காலை 7.30 மணியளவில் டி & சி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனலட்சுமி, 11 மணியளவில் அதிக ரத்தப் போக்கின் காரணமாக இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
”நன்றாக சிகிச்சைக்கு வந்த தனலட்சுமிக்கு தேர்ந்த மருத்துவர்கள் சிகிச்சையளிக்காமல், பயிற்சி மருத்துவர்களைக் கொண்டு மருத்துவம் பார்த்ததால் மட்டுமே அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் இறந்து விட்டார். எனவே தனலட்சுமியின் இறப்பிற்கு மருத்துவமனை நிர்வாகம் மட்டுமே காரணம்” என தனலட்சுமியின் குடும்பத்தார்கள் தெரிவித்து உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து வடபழனி காவல் நிலையத்திலும் அவர்கள் புகார்கள் அளித்தனர். தொடர்ந்து, தகவலறிந்த தி.நகர் துணை ஆணையர் ஹரிஹரன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும், தனலட்சுமி இறந்ததற்குக் காரணம் என்ன என்பதை அறிவதற்காக அவரது உடலை உடற்கூறாய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். விரைவில் இச்சம்பவம் குறித்த தகவல் வெளிவரும் என வடபழனி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மர அரவை இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி உயிரிழப்பு!