சென்னை: சென்னையின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 2028ஆம் ஆண்டிற்குள் விமான நிலையத்தை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்காக சுமார் 4,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இதில் அரசின் புறம்போக்கு நிலங்கள் தவிர, மக்கள் குடியிருக்கும் பகுதிகள், விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்படவுள்ளன. இதனால், பரந்தூரைச் சுற்றியுள்ள 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்கள் ஒரு புறம் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அரசு மறுபுறம் விமான நிலையத்தை அமைப்பதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கடந்த மாதம் டெண்டர் கோரியது. விமான நிலையத்தில் போக்குவரத்து, விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு, சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை, நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், மேம்பாட்டுப் பணிகள், திட்ட வரைபடம் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இந்த டெண்டர் கோரப்பட்டது.
இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்வதற்கான டெண்டருக்கு இரண்டாவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சில ஒப்பந்ததாரர்கள் முன்வந்துள்ள நிலையில், கூடுதலாக ஒப்பந்ததாரர்களை சேர்ப்பதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், முதலாவதாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் கடந்த 6ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது பிப்ரவரி 27ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.