சென்னை - திருவொற்றியூர் சரவணா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர், சந்திரசேகர். தனியார் நிறுவன ஊழியரான இவரிடம் நேற்று மாலை (செப்டம்பர் 5) வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாகக் கூறி, அடையாளம் தெரியாத நபர்கள் செல்போன் அழைப்பில் அழைத்துள்ளனர்.
தூக்க கலக்கத்தில் இருந்த சந்திரசேகர், வங்கியிலிருந்து மேலாளர் தான் பேசுவதாக நம்பியுள்ளார். உடனே அவர்கள் ஏடிஎம் கார்டு காலாவதி ஆகிவிட்டதால், ஒரே நாளில் மாற்றித் தருவதாகக் கூறி, செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணைக் கேட்டுள்ளனர். இவரும் கொடுத்துள்ளார். சற்று நேரத்திற்குள் அவர் வங்கிக்கணக்கில் இருந்து 7 ஆயிரத்து 500 ரூபாய் பிடிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரசேகர் அவர்களிடம் அதுகுறித்து கேட்டபோது, அவர்கள் இவரை திசை திருப்பி, மீண்டும் ஒரு ஓடிபி எண் வரும் அதையும் கூறுமாறு கேட்டுள்ளனர். அப்போது சுதாரித்துக்கொண்ட சந்திரசேகர், ஓடிபி எண்ணை மாற்றிச் சொல்லியுள்ளார். இரண்டு மூன்று தடவை கேட்டும் ஓடிபி எண் தவறாக இருப்பதாக அவர்கள் கூறினர். இதனால் சற்று உஷாரான சந்திரசேகர் வங்கியில் நேரடியாகச் சென்று விசாரித்தபோது, வங்கியில் இருந்து யாரும் பேசவில்லை என்றும்; வங்கிக் கணக்கில் இருந்து ஏழாயிரம் ரூபாய் திருடி ஏமாற்றப்பட்டதும் தெரியவந்தது.
இரண்டாவது முறை ஓடிபி எண்ணை மாற்றிச் சொன்னதனால், வேறு கணக்கில் இருந்த நான்கு லட்சம் ரூபாய் தப்பியதால் அவர் நிம்மதியடைந்தார். இதுகுறித்து சாத்தங்காடு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சந்திரசேகர் புகார் அளித்துள்ளார். காவல் துறையினரும் வங்கிகளும் பலதரப்பட்ட முறையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் வங்கியில் இருந்து பேசுவதாக நம்பவைத்து இன்னமும் சிலர் ஏமாற்றிக் கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சொத்து தகராறு: தாயை மகனே கத்தியால் குத்திய அவலம்!