சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடன் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் மாநகராட்சி சார்பில் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சியில் கடந்த 7ஆம் தேதி முதல் முதல் 20ஆம் தேதி வரை பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்கள், பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய நபர்களிடம் இருந்து இதுவரை மாநகடாட்சி சார்பில் 12 லட்சத்து 13ஆயிரத்து 820 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டியது தொடர்பாக 302 புகார்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றை தவிர்த்து முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க:குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு சீன அதிபர் வாழ்த்து