சென்னையில் ஷெனாய் நகர், அண்ணாநகர், திருமங்கலம், வண்ணாரப்பேட்டை, உயர் நீதிமன்றம், சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் கட்ட 2 ஆயிரத்து 596 கோடி ரூபாய்க்கு, மும்பை மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனங்கள் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்தது.
அந்த ஒப்பந்தத்தில் கூறியபடி குறித்த காலத்தில் பணிகளை முடிக்காமல் 3 ஆண்டுகள் வரை தாமதப்படுத்தியதாகவும் பணிகளை அரைகுறையாக பாதியில் விட்டுள்ளதாகவும் கூறி, இந்த நிறுவனங்கள் அளித்த வங்கி உத்தரவாதத்தில் இருந்து 143 கோடியே 28 லட்சம் ரூபாயை வசூலிக்க நடவடிக்கை எடுத்தது.
இதை எதிர்த்து மும்பை மற்றும் ரஷ்யா நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், வங்கி உத்தரவாதத்தில் இருந்து பணத்தை வசூலிக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க மறுத்து, மும்பை மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக, இந்த உத்தரவை ஆகஸ்ட் 21 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனங்கள் சார்பாக குறிப்பிட்ட தேதிக்குள் மேல்முறையீடு செய்யாவிட்டால், வங்கி உத்தரவாதத்தின்படி மெட்ரோ ரயில் நிர்வாகம் வங்கியில் இருந்து பணம் எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சீனாவை எதிர்கொள்ள மத்திய அரசு அஞ்சுகிறது - ராகுல் காந்தி