சென்னை: வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் நிலையில், அக்டோபர் மாதத்தில் 98 மி.மீ மழை அளவு பதிவாகி இருந்தது. அக்டோபர் மாதத்தில் 171 மி.மீ என்ற இயல்பான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இயல்பை விட 43 சதவிகிதம் குறைவாகவே மழை பதிவானது.
அதைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் தென் தமிழ்நாடு, மேற்கு தமிழ்நாடு, மேற்குதொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்கள், தென்கிழக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் சில உள்மாவட்டங்களில் பருவமழையானது நன்கு பொழிந்தது. ஆனால், வட மாவட்டங்களில் போதிய மழை அளவு என்பது இல்லை.
இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இயல்பை விட குறைவு: வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இன்று காலை வரை இயல்பை விட 17 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை என்பது 266.8 மி.மீ பெய்து இருக்க வேண்டும். ஆனால் நமக்கு மழை ஆனாது 221.மி.மீ தான் பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 17 சதவிகிதம் குறைவு.
மேலும், நேற்றைய தினத்தில் 15 சதவிகிதம் குறைவாக இருந்த நிலையில் தற்போது 17 சதவிகிதம் குறைவாக பதிவாகி உள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் பதிவான மழை அளவு என்பது 0.1 மி.மீ ஆகும். ஆனால் நேற்றைய தினத்தில் (நவ 13 காலை வரை ஒரு நாள் மட்டும்) நமக்கு கிடைத்திருக்க வேண்டிய இயல்பு அளவு என்பது 6.9 மி.மீ ஆகும். நேற்று மட்டும் 99 சதவிகிதம் குறைவாக பதிவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: "4 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும்" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை