சென்னை: தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 10) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 11ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 12 முதல் 14ஆம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் எட்டையபுரம் (தூத்துக்குடி) 5 செ.மீ, செங்கோட்டை (தென்காசி), தென்காசி தலா 4 செ.மீ, ஆயிக்குடி (தென்காசி), சங்கரன்கோவில் (தென்காசி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி) தலா 3 செ.மீ, கோவில்பட்டி (தூத்துக்குடி), பெரியபட்டி (மதுரை) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.