சென்னை: இரண்டு கைகளையும் தட்டினால் தான் சத்தம் வரும் என்றும், அதேபோல கவுன்சிலர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டால் தான் மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும் என்றும் அதிகாரிகளுக்கு மேயர் பிரியா அறிவுறுத்தினார்.
சென்னை பெருநகர மாநகரட்சி தலைமை அலுவலகத்தில் மேயர் ஆர். பிரியா தலைமையில், மாதாந்திர மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். மேலும், அதற்கு மேயர் பிரியா பதில் அளித்தார். பல்வேறு மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளுடன் இணைந்து செயல்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து பேசிய மேயர் பிரியா, "கவுன்சிலர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டால்தான் மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும்" என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவுப்புகள் அறிவிக்கப்பட்டன. அது பின்வருமாறு,
10 ஆயிரம் அபராதம் : சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ரூ.10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி முதல்முறை மாடு பிடிபட்டால் இதுநாள் வரை ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இனி ரூ.5,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் அதே மாடு பிடிபட்டால் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தினக்கூலி ரூ.687ஆக உயர்வு : சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மொத்தம் 2 ஆயிரத்து 873 பணியாளர்கள் பல்வேறு சுகாதார பணிகள் மற்றும் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வந்த ரூ.522 ஊதியத்தில் இருந்து, ஒரு நாளைக்கு ரூபாய் 687 ஆக உயர்த்தி வழங்குவதற்கான தீர்மானம் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனால் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டிற்கு 18.69 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து கூட்டத்தின் கேள்வி நேரத்தில், ஒவ்வொரு கவுன்சிலரும் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து கேள்விகளை எழுப்பினர். அதற்கு மேயர் ஆர்.பிரியா பதிலளித்து பேசினார்.
மன்றத்தில் சிரிப்பலை: சென்னை மாநகராட்சி 39வது வார்டு உறுப்பினர் தேவி, கேள்வி நேரத்தில் பேசிய போது, தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் ஆய்வுக்கு செல்லும் போது, மக்களால் உடனடியாக தன்னை அடையாளம் காண இயலவில்லை எனவும், தலைகவசம் அணியாமல் சென்றால் காவல் துறையினர் அபராதம் விதிப்பதாகவும் தெரிவித்தார்.
இதனால் கவுன்சிலர்களுக்கு ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கோரினார். இதனால் மன்றத்தில் இருந்த உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. அப்போது பதிலளித்த மேயர் பிரியா, "ஹெல்மெட் அணிவது பாதுகாப்பிற்காக தான். அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது அரசின் உத்தரவு. அதை கவுன்சிலர் என்றாலும் மீறக்கூடாது" என்றார்.
இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஸ் குமார், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், நிலைக் குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 2 Thousand Ruppes : இன்றுடன் காலாவதியாகும் ரூ.2ஆயிரம் நோட்டுகள்! கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?