சென்னை: மேற்கு மாம்பலம் ராஜீவ் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(70). இவரது மனைவி பத்மாவதி(66). இவர்களது மகளுக்கு திருமணமாகி கணவர் வீட்டில் வாழ்ந்து வரும் நிலையில், இவர்கள் இருவரும் சொந்த வீட்டில் முதல் தளத்தில் தனியாக வசித்து வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு வெங்கடேசன் வீட்டில் வாஷின் மிஷின் பழுதடைந்ததால் அதனை சரிசெய்ய ஆட்களை அழைத்து வருவதற்காக நேற்று மாலை அவர் வெளியே சென்றிருந்தார்.
அப்போது வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வீட்டில் தனியாக இருந்த பத்மாவதியிடம் தான் பிளம்பர் என்றும் சமையலறையில் உள்ள குழாயை சரிசெய்ய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது பத்மாவதி குழாய் இல்லை வாஷின் மிஷின் சரிசெய்ய வேண்டும் என தெரிவித்து அவரை வீட்டிற்குள் அழைத்துள்ளார்.
பின்னர் அந்த நபர் வீட்டில் குழாய் மற்றும் வாஷின் மிஷினை பார்த்துவிட்டு இதற்கு சில பொருட்கள் தேவைப்படுகிறது என கூறியதுடன் உங்க வீட்டு கதவு கூட சரியாக இல்லை எனத் தெரிவிக்க உடனே பத்மாவதி அனைத்து கதவுகளையும் சாரிபார்த்து தருமாறு கேட்டுள்ளார். பின்னர், அந்த நபர் ஹால் கதவை சரிசெய்து விட்டு படுக்கையறை கதவை சரிசெய்வதாக உள்ளே சென்றபோது பத்மாவதி ஹாலில் அமரந்திருந்தார்.
வேலை முடிந்து அந்த நபர் பணத்தை பெற்றுகொண்டு சென்ற பின்னர் இரவு வீட்டிற்கு வந்த கணவரிடம் பத்மாவதி நீங்கள் அனுப்பிய நபர் வந்து சென்றதாக தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் நான் யாரையும் அனுப்பவில்லை எனக் கூறிவிட்டு உடனே பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் இருந்த 40 சவரன் மதிப்புள்ள 15 தங்க வளைகள் திருடுபோனது தெரியவந்தது.
இதன்மூலம் வீட்டிற்கு பிளம்பிங் செய்ய வந்த அடையாளம் தெரியாத நபர் பத்மாவதியை ஏமாற்றி நகைகளை திருடி சென்றதை அறிந்த வெங்கடேசன் இதுகுறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி உள்ளனர்.
விசாரணையில் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், வீடு புகுந்து திருடிவிட்டு, மிகவும் கூலாக சைக்கிளிலேயே வில்லிவாக்கம் வரை சென்றதும் தெரியவந்தது. சிசிடிவி காட்சியில் பதிவான புகைப்படத்தை வைத்து விசாரணை நடத்தியபோது, அவர் பழைய குற்றவாளி ஜோதிமணி என்பதும், இவர் மீது 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தன.
இதையடுத்து பெங்களூரில் பதுங்கி இருந்த வில்லிவாக்கத்தை சேர்ந்த ஜோதிமணி(56) என்பவனை போலீசார் இன்று (பிப்.21) கைது செய்தனர். பின்னர் அவனிடம் நடத்திய விசாரணையில் ராணிப்பேட்டையை பூர்வீகமாகக் கொண்ட ஜோதிமணி வீட்டில் தனியாக உள்ள முதியவர்களை குறிவைத்து இவ்வாறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதுவும் யாருக்கும் சந்தேகம் வராத படி சைக்கிளிலேயே சென்று கொள்ளையில் ஈடுபட்டு தப்பித்து செல்வதும் தெரியவந்தது.
பின்னர் அவரிடம் இருந்து 17 சவரன் நகையை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். பொதுவாக, ஜோதிமணி திருடிய நகைகளை அவரிடம் இருந்து மீட்பது கடினம் எனவும் இந்த முறை பாதி நகையை மீட்டிருக்கிறோம் என அசோக் நகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய போர்மேன்!