சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், ஒஎல்எக்ஸ் தளத்தில் ஆப்பிள் செல்போன் 10,000 ரூபாய்க்கு விற்பனைக்கு இருப்பதைப் பார்த்து, உரிய நபரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, 10 ஆயிரம் ரூபாயுடன் சிந்தாதிரிப்பேட்டை அருகே ஐபோனை பெற்றுக்கொள்ளுமாறு அந்நபர் தெரிவித்துள்ளார். ஆனால், அங்கு சென்று, 10 ஆயிரம் ரூபாயை கொடுத்த பிறகுதான், அது ஆப்பிள் போன் அல்ல மாறாக அது 'சீன மாடல்' போன் என்பதும், ஓஎல்எக்ஸில் குறிப்பிடப்பட்டிருந்த ஐபோனைக் கொடுக்காமல், உபயோகமில்லாத வேறொரு செல்போனை அந்நபர் கொடுத்து ஏமாற்றியதும் ராஜேஷூக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையிடம் ராஜேஷ் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், அதே நபர் சிந்தாதிரிப்பேட்டையில் வேறொரு நபரை ஏமாற்றவதைப் பார்த்த ராஜேஷ், உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்தார். அதனைத் தொடந்து உடனடியாக அங்கு சென்ற காவல் துறையினர், அந்நபரைக் கைது செய்தனர்.
விசாரணையில், மோசடியில் ஈடுபட்ட நபர் அப்துல் மஜீத் என்பதும், குறைந்த விலையில் பொருள்கள் தருவதாகக் கூறி பல பேரிடம் அவர் லட்சக்கணக்கில் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. அவர் தனக்கு கிடைத்த பணத்தில், உல்லாச வாழ்க்கை அனுபவித்து வந்துள்ளார். அவரிடமிருந்து, லேப்டாப், சிம்கார்டுகள், வங்கி பாஸ்புக், மெமரிகார்டுகள் போன்றவற்றைப் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்த ஆணின் உறுப்பை துண்டித்த பெண்!