சென்னை: மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் 75ஆம் ஆண்டு பவள விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ''முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் படித்த கல்லூரி என்பதை விட எம்ஐடி-க்கு வேறு பெருமை தேவை இல்லை. மேலும் நாட்டின் முன்னாள் பிரதமர்களான நேரு, இந்திரா காந்தி மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் மற்றும் கல்விக் கண் திறந்த பெருமைக்குரிய காமராஜர் உள்ளிட்டப் பல தலைவர்கள் எம்ஐடி கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் இந்த கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சியில் நான் பங்கேற்றதை நினைத்துப் பெருமை கொள்கிறேன்'' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ''தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாகவும் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் பட்டியலில் முதன்மைபெற்ற மாநிலமாகவும் திகழ்கிறது. வாரிசுகளால் எம்ஐடி கல்வி நிறுவனம் வளர்ந்து இருக்கிறது, வாரிசுகளால் ஏராளமான தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியைப் பெற்றுள்ளனர். தான் அரசியல் பேசுவதாக யாரும் நினைக்க வேண்டாம். வாரிசுகள் நினைத்தால் ஒரு தலைமுறை மட்டுமல்ல பல தலைமுறைக்கு சேவையாற்ற முடியும் என்பதற்கு எம்ஐடி கல்வி நிறுவனம் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது'' எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், திராவிட மாடல் ஆட்சியின் முதன்மையான நோக்கம், கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் எனத் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளிக்கல்வி கிடைப்பதை காமராஜர் ஆட்சி காலம் உறுதி செய்தது, அனைவருக்கும் கல்லூரி கல்வியை கலைஞர் ஆட்சிக் காலம் உறுதி செய்தது, தற்போது அனைவருக்கும் ஆராய்ச்சி கல்வியை உறுதி செய்வதுதான் எனது நோக்கம் எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் உயர் கல்வி அமைச்சர் பொன்முடி,சிறுகுறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.
அவரைத் தொடர்ந்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்த கல்லூரி தொடங்கியபோது 4 துறைகள் மட்டும்தான் இருந்தது எனவும்; அதன்பின் அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டு பல்வேறு துறைகள், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். மேலும், மாணவர்களுக்கு படிப்பு வேண்டும், அதேபோல் நாட்டில் என்ன நடக்கிறது என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் அப்போது அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: Tenkasi: குற்றாலம் ஹோட்டலில் கெட்டுப்போன 50 கிலோ உணவுப்பொருட்கள் பறிமுதல்!