சென்னை: இது குறித்து பேசிய பொது நூலகத்துறை இயக்குநர் இளம் பகவத், “சென்னை இலக்கியத் திருவிழா வரும் 6,7,8 ஆகிய தேதிகளில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது.
இந்த இலக்கியத் திருவிழாவில் சென்னையை குறித்த பழமைகளை விளக்கும் வகையில் தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்களின் படைப்பு அரங்கம், பண்பாட்டு அரங்கம், மாணவர்களுக்கான பயிலும் அரங்கம், சிறுவர்களுக்கான இலக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கான இலக்கிய போட்டியை ஜனவரி 4ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். கல்லூரி மாணவர்களின் பேச்சாற்றல் மற்றும் கவிதை திறன் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
மேலும் சென்னை கலை இலக்கிய விழாவில் சென்னையின் பெருமைகள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பழமைகளையும் பண்பாடுகளையும் விளக்கும் வகையில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்தரங்கும் நடத்தப்பட உள்ளது. சென்னை இலக்கிய திருவிழாவில் வடசென்னை குறித்தும் சென்னையின் பழமைகள் குறித்தும் விளக்கும் வகையில் ஆவணங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளது” எனத் தெரிவித்தார்.