சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் சதீஷ்குமார். கேரம் போர்டு விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டுள்ள சதீஷ்குமார் அதில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சமீபத்தில் கேரம் போர்டு விளையாடும்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனக்கசப்படைந்த சதீஷ்குமார் காவல் நிலையத்தில் பிரகாஷ் மீது புகார் அளித்தார்.
புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் இருவரிடமும் சமரச பேச்சு வார்த்தை நடத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சதீஷ்குமார் ஜனவரி 17ஆம் தேதி பெரம்பூரில் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பிரகாஷ் பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு சதீஷ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கல்லால் அடித்துள்ளார். இதனால், பலத்த காயமடைந்த சதீஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்பின்னர், தன்னை கல்லால் தாக்கிய பிரகாஷ் மீது செம்பியம் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் புகார் அளித்தார். ஆனால், இதுவரை பிரகாஷ் மீது செம்பியம் போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து இதனைத் தெரிவித்த சதீஷ்குமார், பிரகாஷிற்கு அரசியல் பின்புலம் உள்ளதால்தான் காவல்துறை அவருக்கு சாதகமாக நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.