சென்னை: சென்னை ஐஐடி உருவாக்கி உள்ள உள்நாட்டுத் தயாரிப்பான 'நகராண்மை திடக்கழிவு எரிப்பான் சோதனை ஆலை', திருச்சி மாவட்டத்தில் உள்ள பாரத மிகுமின் நிறுவனத் தொழிற்சாலையில் இயங்க உள்ளது. பிரிக்கப்படாத நகராண்மை திடக்கழிவுகளை திறம்பட பதப்படுத்துவதற்காக முதன்முறையாக 'சுழல் உலை தொழில்நுட்ப'த்தில் இந்த எரிப்பான் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த ஆலையில் நாள் ஒன்றுக்கு ஒரு டன் வரை பிரிக்கப்படாத நகராண்மைக் கழிவுகளைப் பதப்படுத்த முடியும். இந்த ஆலையில் சுத்தமான வாயு உமிழ்வு, சாம்பல் ஆகியவை துணைத் தயாரிப்புகளாக வெளியேறும். சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்களால் எரித்தல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுக்கான தேசிய மையத்தில் இது உருவாக்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தில் இந்த ஆலை முக்கிய பங்கு வகிக்க உள்ளது.
திருச்சி பெல் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி-யின் இயக்குநர், பேராசிரியர் வி.காமகோடி ஆலையைத் தொடங்கி வைத்தார். சென்னை ஐஐடி கெமிக்கல் என்ஜினியரிங் துறையின் இணைப் பேராசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஒட்டுமொத்தப் பணிகளும் ஆறு மாதங்களில் முடிக்கப்பட்டு திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் இந்த ஆலை நிறுவப்பட்டுள்ளது.
திடக்கழிவு எரிப்பான் இயந்திரத்தை உருவாக்கிய சென்னை ஐஐடி-யின் ரசாயனப் பொறியியல் பிரிவு இணைப் பேராசிரியர் ஆர்.வினு கூறுகையில், "சென்னை ஐஐடி-யில் ஆரம்ப கட்ட பரிசோதனைக்காக சிறிய அளவிலான சுழல் உலை எரிப்பானைப் பயன்படுத்தினோம். வெவ்வேறு அளவுகளில் கழிவுகளை ஆய்வு செய்து, முழு இயந்திரம் திருச்சி பெல் நிறுவனத்தில் இயங்கி வருகிறது. பெல் நிறுவனத்தில் உள்ள இயந்திரத்தின் தரவுகளால் செயல்பாட்டை அளவிட ஏதுவாக இருக்கும்.
கழிவுகளை எரிக்கும்போது, பறக்கும் துகள்களைப் பிரிக்க, இந்த எரிப்பானில் சல்லடை போன்ற அமைப்பு உள்ளது. இந்த சல்லடை அமைப்பு, சென்னை ஐஐடி-யில் 40 விழுக்காடு கலப்புக் கழிவுகளால் சோதனை செய்யப்பட்டது. வடிப்பான்கள் மாசுக்களைக் கட்டுப்படுத்தி, உமிழ்வை குறிப்பிட்ட வரைமுறைக்குள் இருப்பதை உறுதி செய்கின்றன’’ என தெரிவித்தார்.
இதையும் படிங்க: திறமை அடிப்படையில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது குடும்ப அரசியல் இல்லை - துரை வைகோ அதிரடி!