இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை உயர்தர கல்வி அமைப்பாக (Centre for Excellence) உருவாக்குவதற்கு ராம் கோபால் ராவ் தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழு அளித்துள்ள பரிந்துரைகள் தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி வெளியாகிவுள்ளது.
இட ஒதுக்கீடு முறை தேவையில்லை

ராம் கோபால் ராவ் தலைமையிலான குழு அளித்த அறிக்கையில், "தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதால், ஐஐடி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு தற்போது உள்ள இட ஒதுக்கீடு முறை தேவையில்லை" என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர் பணி இடங்களிலும் இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்றும் ராம் கோபால் ராவ் குழு பரிந்துரை அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
சமூகநீதியை குழி தோண்டி புதைக்கும் முயற்சி
ஐஐடி கல்வி நிறுவனங்களை முழுக்க முழுக்க உயர் வகுப்பு ஆதிக்க நிறுவனங்களாக மீண்டும் மாற்ற, ஆராய்ச்சி கல்வி மற்றும் உயர்தர கல்வி அமைப்பு என்றெல்லாம் ஏமாற்றி சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. இது வன்மையான கண்டனத்திற்குரியது என தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களான வைகோ, பழ.நெடுமாறன் உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை ஐஐடியில் அமுல்படுத்தக் கூடாது என்கிற ராம் கோபால் ராவ் குழுவின் அறிக்கையை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டியதில்லை என்று பேராசிரியர் ராம் கோபால் ராவ் குழு அறிக்கை வழங்கியிருக்கின்றது.மத்திய அரசு இந்த அறிக்கையை ஏற்க கூடாது. கடந்த 25 ஆண்டு காலமாக இட ஒதுக்கீட்டை ஏற்கனவே ஐஐடி நிறுவனம் நிரப்பப்படவில்லை.
முழுமையாக இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். இதை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஐஐடி நிறுவனத்தை முற்றுகையிடுகிறோம் என்றார்.
ஐஐடி நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்து கல்யாண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஐஐடி கல்வி நிறுவனங்களில் சமூகநீதியை குழிதோண்டி புதைக்க பாஜக முயற்சி - வைகோ கண்டனம்.