சென்னை கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த எண்ணெய் வியாபாரி சீனிவாசலு(54). இவருடைய வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த சுஜன் என்பவர் 2016-2017 ஆண்டுகளில் சமையல்காரராக பணி செய்தார். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள மரச்சாமான் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் சுஜன் நேற்றிரவு சீனிவாசலு வீட்டிற்குச் சென்று அவர்களுடன் நட்பாகப் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்தார். அந்த உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரும் மயங்கி உள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த 15 சவரன் நகைகளையும் 30 ஆயிரம் ரூபாய் பணத்தையும் சுஜன் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
மயக்கம் தெளிந்தவுடன் இந்தச் சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் சீனிவாசலு புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், சுஜன் தப்பித்துச் செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் 15 சவரன் நகைகளையும் காவல் துறையினர் மீட்டனர்.
இதையும் படிக்க: 'என்னடா இது தங்கத்துக்குப் பதிலா தக்காளி' - பாகிஸ்தானில் விநோதத் திருமணம்!