சென்னை: சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது, ஒளிவுமறைவற்ற முறையில் டெண்டர் கோரப்பட்டதாகவும், அதில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்றும், அந்த குழுவிலும் இடம்பெறவில்லை என்றும் வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், ஆரம்பகட்ட விசாரணையை கருத்தில் கொள்ளாமல், பணிகள் செயல்படுத்தியது தொடர்பான சிஏஜி எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கையின் அடிப்படையில் தன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தை தவறாக வழி நடத்தியுள்ளதாகவும் வாதிடப்பட்டது.
புகார்தாரரான அறப்போர் இயக்கத்தின் தரப்பில், பொத்தாம் பொதுவாக அல்லாமல், குறிப்பிட்டு குற்றச்சாட்டுக்கள் கூறி அளிக்கப்பட்ட புகாருக்கு ஆதாரமாக ஏராளமான ஆவணங்கள் தங்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசு உள்நோக்கத்துடன் வழக்குபதிவு செய்துள்ளதாக அமைச்சர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு எனவும், முந்தைய அரசும், லஞ்ச ஒழிப்புத் துறையும் தான் உள்நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் வாதிடப்பட்டது.
மற்றொரு புகார்தாரரான ஆர்.எஸ்.பாரதி தரப்பில், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் அடிப்படையில் மட்டுமே, உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், புலன் விசாரணை அதிகாரியின் விசாரணை முடிவின் அடிப்படையில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் விளக்கமளிக்கப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதை தடுக்கும் வகையில், நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய் என்பதை 20 கோடியாக மாற்றி அமைத்துள்ளனர் என விசாரணையில் தெரிய வந்ததாக குறிப்பிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வேலுமணி தாக்கல் செய்திருந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகளில் இன்று (நவம் 30) பிற்பகல் 2:30 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பளிக்க உள்ளனர்.
இதையும் படிங்க: தகுதியில்லாதவர்களுக்கு கலைமாமணியா? - என்ன சொல்லப்போகிறது நீதிமன்றம்?