இந்தியா - ஜப்பான் இடையேயான பொருளாதார உறவை மேம்படுத்த சென்னையில் கார் உற்பத்தி தொழிற்சாலை தொடங்க தமிழ்நாடு அரசுக்கும், நிசான் மற்றும் ரெனால்ட் கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இடையில் 2008ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. 6,100 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தி செய்யப்படும் 4 லட்சம் கார்களுக்கு, தமிழ்நாடு அரசு, முழு வரிச்சலுகையை வழங்கும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தாகி 7 ஆண்டுகள் கடந்தும் தமிழ்நாடு அரசு வரிச்சலுகையை தரவில்லை. மொத்தம் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகையை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என இரண்டு நிறுவனங்களும் மத்திய அரசிடம் முறையிட்டது. அதேபோல சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடர்ந்தன.
இந்நிலையில், 5 ஆயிரம் கோடி ரூபாய் வரிச் சலுகையை பெற்றுத் தரக் கோரி நிசான் நிறுவனம், சர்வதேச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் தொழிற்துறை முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நிசான் மற்றும் ரெனால்ட் நிறுவனங்களுடன் 21 ஆண்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஒப்பந்தம் முடிவடைவதற்குள் வரிச்சலுகை கோரி சர்வதேச நீதிமன்றத்தை நாடுவது சட்டவிரோதமானது எனவும், தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தையும் நடத்தாமல் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவது ஒப்பந்தத்திற்கு எதிரானது எனவும் தமிழ்நாடு அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒப்பந்தத்தின் அடிப்படையில் 5,000 கோடி ரூபாயை நிக்சான் ரெனால்ட் நிறுவனத்துக்கு வழங்க அரசு ஒப்புக்கொண்டதால் வழக்கை திரும்ப பெற அனுமதிக்கக்கோரி இருதரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சமரசத்தின் அடிப்படையில் வழக்கை திரும்ப பெற நிக்சான் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.