நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அமீனுல்லா தொடர்ந்த வழக்கில், தன்னிடமுள்ள கைகளால் அரபு மொழியில் எழுதப்பட்ட புனித நூலான குர்ஆன் எத்தனை ஆண்டுகள் பழமையானது? அதன் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் மத்திய தொல்லியல் துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், மிகப் பழமையான குர்ஆனை மாதிரி எடுப்பதால் சேதமடையவும் அழிந்துபோகவும் வாய்ப்புள்ளது. அதனால் ஆய்வுக்காக லண்டன் அனுப்புவதற்கு பதிலாக இந்தியாவில் உள்ள ஆய்வுக் கூடத்திலேயே ஆய்வு செய்யலாம் எனத் தெரிவித்தார்.
அமீனுல்லா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கைகளால் எழுதப்பட்ட குர்ஆன் 2 செ.மீ. நீளமும், 1.5 செ.மீ. அகலமும் உடையது. அதை ஆய்வு செய்யும் வசதி இந்தியாவில் இல்லை. ஆய்வுக்காக மாதிரி அனுப்புவதில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அதன் கிழிந்த சில பக்கங்களை ஆய்வுக்கு உட்படுத்தலாம் எனத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தனி நீதிபதி, குர்ஆனின் இரு மாதிரிகளை எடுத்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கும் லக்னோவில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கும் நான்கு வாரத்திற்குள் அனுப்ப தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தொல்லியில் துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தனர். மேலும், மூன்று வாரங்களில் மாதிரியை எடுத்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், லக்னோவில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு இரண்டு வாரங்களில் ஒப்படைக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: கனிமொழி மீதான தேர்தல் வழக்கு: விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!