சென்னை: தமிழ்நாடு முழுவதும், டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில் தின்பண்டங்கள் விற்பனை, காலி பாட்டில்களைச் சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
கரோனா ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டுள்ளதால், புதிய டெண்டருக்குப் பதிலாகப் பழைய டெண்டர் நீட்டிக்க வேண்டும், நில உரிமையாளர்களின் தடையில்லாச் சான்றைப் பெற வேண்டும் எனக் கட்டாயப்படுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகளுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதி சி. சரவணன் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி, டெண்டர் படிவங்கள் பெறுவதற்கு யாரையும் தடுக்கவில்லை என்றும், விண்ணப்பம் வாங்க விடாமல் தடுக்கப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை எனவும், இதுவரை தமிழ்நாடு முழுவதும் 13 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து மனுதாரர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேஷ் ஆஜராகி, கரோனா காலத்தில் பார்கள் மூடப்பட்டதால், தங்களுக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும், கட்டட உரிமையாளர்களின் ஆட்சேபனையில்லா சான்று தேவையில்லை எனக் கூறிவிட்டு, தற்போது வாடகை ஒப்பந்தங்கள் கேட்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
குறிப்பாக டெண்டர் நடைமுறைகள் நிறுத்தப்பட்ட எட்டு மாவட்டங்களைப் பொறுத்தவரை புதிய டெண்டர் கோரக்கூடாது என உத்தரவிடவும், ஒரு அலுவலரை நியமித்து டெண்டர்களை திறக்க வேண்டும் என்றும், அனைத்து நடவடிக்கைகளையும் காணொலியாகப் பதிவுசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தார்.
இந்த வழக்கில் இன்று (ஜனவரி 31) தீர்ப்பளித்த நீதிபதி சரவணன், அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இணைய வழியில் நேரடி நெல் கொள்முதல்: நுகர்பொருள் வாணிபக் கழகம் சுற்றறிக்கை