சென்னை: தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் புரோமோ பிரைவேட் லிமிடட் ஆகியோர் இணைந்து, “ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4” கார் பந்தயத்தை, சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடத்தவிருந்தன. இந்த பந்தயத்திற்கு ஏற்றார்போல், சுவாமி சிவானந்தா சாலை, தீவுத்திடல், அண்ணாசாலை பகுதி மற்றும் நேப்பியர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நடைபாதைகள், தடுப்புகள் மற்றும் சாலைகள் அகற்றப்பட்டு, பந்தய தூரமான 3.5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சாலை சீரமைக்கப்பட்டு வந்தது.
கார் பந்தயத்திற்கான ஆயத்தப் பணிகள் துவங்கியதும், அப்பகுதிகளில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டது. மேலும், இந்த பந்தயத்திற்காக அரசுத் தரப்பில் ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச பந்தயத்தடம் இருக்கும்போது, நகர் பகுதியில் பந்தயம் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அப்பகுதியில் கார் பந்தயம் நடத்துவதால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும், இந்த பந்தயத்தால் ராணுவம், துறைமுகம், கடற்படைப் பணிகள் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து, இந்த வழக்கு விசாரணை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளால், டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடத்தப்பட இருந்த பந்தயம், டிசம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மிக்ஜாம் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக, சென்னையில் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையரையின்றி எந்த தேதியும் குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.