சென்னையில் ஏழுகிணறு, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு உள்ளிட்ட இடங்களில் அதிகாலை நேரங்களில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து அவர்களிடமிருந்து செல்ஃபோன் மற்றும் தோள் பைகளை திருடுவது என தொடர் புகார்கள் காவல் நிலையங்களில் பதிவாயின. கடந்த 30ஆம் தேதி சென்னை ஏழுகிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டுமே ஒரே நாளில் அதிகாலை 6 மணியளவில் 4 சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து ஏழுகிணறு காவல் நிலைய ஆய்வாளர் தவமணி தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் செல்ஃபோன் கொள்ளையில் ஈடுபட்ட 2 கொள்ளையர்களை துரத்திச் சென்று பிடித்த ஆய்வாளர் தவமணி தலைமையிலான தனிப்படை, பிடிபட்டவர்கள் திருவொற்றியூரைச் சேர்ந்த அரவி என்ற அரவிந்தன் மற்றும் புளியந்தோப்பைச் சேர்ந்த ஓசை மணி என தெரியவந்தது. இதில் ஓசை மணி குண்டர் சட்டத்தில் இருந்து தற்போதுதான் வெளியே வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கொள்ளையில் ஈடுபட்ட இவர்கள் ஆந்திராவிற்கு செல்வது வழக்கம் என்றும் கடந்த 30ஆம் தேதி ஏழுகிணறு பகுதியில் நான்கு இடங்களில் கொள்ளையடித்து விட்டு, உடனடியாக ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கசந்தர் என்னும் இடத்திற்குச் சென்றுள்ளனர். அங்குதான் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் திருடர்கள் கூட்டம் நடக்கும் என்றும் அந்தக் கூட்டத்தில் இவர்கள் தவறாமல் கலந்து கொள்வதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவர் மீதும் ஏராளமானத் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்வதற்காக பரிந்துரை கடிதத்தை ஏழுகிணறு காவல்துறையினர் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.