சென்னை: எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்தை ஒட்டி நடைப்பாதையில் 60 ஆண்டுகளாக பல குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் சென்னை வளர்ச்சிப் பணிகளுக்காக பல்வேறு திட்டகளை செய்து வரும் மாநகராட்சி, அங்கு வசிக்கும் மக்களை வேறு இடத்திற்கு மாற்றும் பணியில் நேற்று (அக்.16) ஈடுபட்டனர்.
மாற்று இடம் வழங்காமல் அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காவல் துறையினர், மாநகராட்சி அலுவலர்களிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அலுவலர் ஒருவர் கூறுகையில், "இவர்கள் தற்காலிகமாக கண்ணப்பர் தெருவில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்படவுள்ளனர். இன்னும் 10 நாட்களில் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வழி செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய ஐ.ஆர்.சி.டி.யு.சி பிரதிநிதி வனேசா பீட்டர், "எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி அப்புறப்படுத்துகின்றனர்.
இது மனிதாபிமான மற்றும் நியாயமற்ற செயல். அவர்கள் அனைவரது உடமைகளையும் ஒரே லாரியில் எடுத்துச் செல்கின்றனர்.
10 நாட்கள் தங்க வைக்கப்போவதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். அதற்குப் பிறகு அவர்களுக்கு வீடுகள் கிடைக்குமா என்பது தெரியாது. எனவே, அரசு தலையிட்டு இந்த பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பி.இ, பி.டெக் கலந்தாய்வு - 62,683 காலி இடங்கள்