நாடு முழவதும் நாடாளுமன்றத் தேர்தல், தமிழ்நாட்டில் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் பணம் விநியோகத்தைத் தடுப்பதற்காக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் பேருந்து மூலம் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்திறங்கிய நான்கு பயணிகள் சந்தேகத்துக்கிடமான முறையில் இன்று காலை சென்னை செனட்ரல் வால்டாக்ஸ் சாலை அருகே நின்று கொண்டிருந்தனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் சந்தேகமடைந்து, அவர்கள் நால்வரையும் விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தால், அவர்களிடமிருந்த உடைமைகளை சோதனை செய்தனர்.
சோதனையில் அந்த நால்வரின் பைகளில் உரிய ஆவணங்களின்றி சுமார் 1 கோடியே 36 லட்சம் ரூபாய் பணம் மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பூக்கடை காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.