நிலம் வாங்குவது போல் நடித்து கத்தி முனையில் கொள்ளை:
சென்னை: ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணி (35). இவர் அசோக் நகரில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் கலைவாணி அலுவலகத்தில் பணியில் இருந்தபோது நேற்று முன்தினம் (செப்.07) அலுவலக எண்ணிற்கு அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டனர்.
பின்னர், கலைவாணியிடம், “நாங்கள் வெளிநாட்டு இந்தியர்கள். எங்களுக்கு சென்னையில் நிலம் வேண்டும். சென்னையில் எந்தெந்த இடங்களில் நிலங்கள் இருக்கிறது” என விசாரித்திருக்கின்றனர். தொடர்ந்து, இது குறித்து அனைத்து விவரங்களையும் தாங்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு நேரில் வந்து தருமாறு கேட்டுள்ளனர்.
இதனைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த கலைவாணி, அலுவலகத்தில் இருந்த நிலம் பற்றிய விவரங்களை எடுத்துக்கொண்டு அவர்கள் தங்கி உள்ள அடையாறு நட்சத்திர விடுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றார். நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த இரண்டு நபர்கள் கலைவாணியிடம் நிலம் குறித்த ஆவணங்கள் மற்றும் தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென கத்தியை காட்டி மிரட்டி கலைவாணி அணிந்திருந்த 9 சவரன் நகை மற்றும் அவருடைய இருசக்கர வாகனத்தையும் பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கலைவாணி, இது குறித்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பி ஓடிய நபர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்து தேடி வருகின்றனர்.
இருசக்கர வாகனம் திருடும் சிசிடிவி காட்சி:
சென்னை: குரோம்பேட்டை சேம்பர்ஸ் காலனியில் வசித்து வருபவர் செல்வா (39). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு வேளாங்கண்ணி கோயிலில் திருவிழாவை முன்னிட்டு குரோம்பேட்டையில் இருந்து வேளாங்கண்ணிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார்.
சாமி தரிசனத்தை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது ஆசையாக வாங்கி பயன்படுத்தி வந்த பல்சர் 220 இருசக்கர வாகனம் வீட்டிலிருந்து காணாமல் போய் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள், எந்த ஒரு பதட்டமும் இன்றி இருசக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து வாகனத்தை ஓட்டிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்தை வைத்து இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர்களை குரோம்பேட்டை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்:
சென்னை: திருவெற்றியூர் ரயில் நிலையத்தில் நேற்று (செப்.08) காலை இருவேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மாற்றி மாற்றி தாக்கிக் கொண்டனர். அப்போது, இருபதுக்கு மேற்பட்ட மாணவர்கள் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டதால் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
பின்னர் இது குறித்து கொருக்குபேட்டை ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மோதலில் ஈடுபட்டது புது கல்லூரி மாணவர்கள் மற்றும் தியாகராய கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது தெரியவந்தது. இது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
7 பேருக்கு ஆயுள் தண்டனை: சிறப்பாக பணியாற்றிய பெண் காவலருக்கு பாராட்டு:
சென்னை: கோயம்பேடு காவல் நிலையத்தில் நீதிமன்ற அலுவல் தொடர்பாக பணிபுரியும் பெண் காவலர் பாக்யலட்சுமி கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு கொலை வழக்கு சம்பந்தமாக விசாரணை அதிகாரிகள் சேகரித்த தரவுகளையும், ஆவணங்களையும் முறையாக ஆவணப்படுத்தி அதன் மூலம் 7 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார். குறுகிய காலத்தில் சிறப்பாக பணியாற்றி விரைந்து வழக்குகளை முடிக்க பெண் காவலர் பாக்கியலட்சுமி முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
கோயம்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பழிக்குப் பழி கொலை வழக்கில் 100 முறை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் முறையாக அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து 7 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார்.
அதேபோல் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் குற்றவாளி ஒருக்கு 10 ஆண்டுகள் தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளார். இதனை உயர் காவல் துறை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.
காட்டுக்குள் இருடியம் இருப்பதாக கூறி மோசடி செய்த 3 பேர் கைது:
சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் சின்னசாமி. இவரின் தூரத்து உறவினர் கமலக்கண்ணன். இவர் சின்னசாமி இடம் கொடைக்கானலில் அடர்ந்த காட்டுப்பகுதி மலைகளில் இருடியம் இருப்பதாகவும் அதனை விற்பதற்கு முதலீடு செய்தால் 250 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
மேலும், சின்னசாமியை நம்ப வைப்பதற்காக கமலக்கண்ணன், மத்திய அரசின் நிறுவனத்தின் பல போலி ஆவணங்களை காண்பித்து ஏமாற்றியுள்ளார். இதனை நம்பிய சின்னசாமி சிறுக சிறுக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தை கமலக்கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுதாகர், பிரபாகர் ஆகியோரிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் சின்னசாமிக்கு லாபம் எதுவும் கொடுக்காமலும் கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். மேலும், சில நாட்களுக்கு பிறகு மூவரும் தலைமறைவாகியுள்ளனர். இதனால் அதிர்ச்சடைந்த சின்னசாமி, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவு காவல் துறையினர் தலைமறைவாக இருந்த மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வயதான தம்பதி கொடூரமாக கொலை: நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பலுக்கு போலீஸ் வலை!