சென்னை: "சிவில் விவகாரங்களில் தலையிடுவதை போலீசார் தவிர்க்க வேண்டும்" - ஏடிஜிபி அருண் சுற்றறிக்கை
சொத்துத்தகராறு, வழித்தட தகராறு போன்ற சிவில் பிரச்சினைகளில் அவசியம் இன்றி தமிழக போலீசார் தலையிடக் கூடாது என்று போலீசாருக்கு ஏடிஜிபி அருண் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் அனுப்பிய சுற்றறிக்கையில், "எப்.ஐ.ஆர், சி.எஸ்.ஆர் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளிட்டவை இன்றி எந்த ஒரு மனுக்கள் மீதும் காவல்துறை விசாரணையும் நடத்தக் கூடாது.
பணத்தகராறு, சொத்து தகராறு, வழித்தட தகராறு போன்ற சிவில் விவகாரங்களில் தலையிடுவதை போலீசார் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும், சிவில் விவகாரங்களில் தலையிடுவது அவசியம் என கருதினால் முன்னதாகவே, அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்களிடம் அல்லது காவல் ஆணையர்களிடம் அனுமதி பெற வேண்டும்.
மேலும், உரிய ஒப்புதல் இன்றி விசாரணை மேற்கொண்டால் அந்த விசாரணை சட்ட விரோதமாகத் தான் கருதப்படும். இதுமட்டும் அல்லாது சம்மந்தப்பட்ட போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்." என்று தெரிவித்துள்ளார்.
பணப்பரிமாற்றம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றியவர் கடத்தல்.. ஒருவர் கைது.. இருவர் தலைமறைவு..!
சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவில் வசிப்பவர் அப்துல் ரகுமான் (32) இவர் மண்ணடியைச் சேர்ந்த அயூப் என்பவரின் பணப்பரிமாற்றம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அயூப் பணப்பரிமாற்றம் செய்யக் கொடுத்த ரூபாய் 13 லட்சத்தை அப்துல் ரகுமான் எடுத்துக்கொண்டு தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.
இதனால், அதிர்ச்சி அடைந்த ஆயூப் தனது நண்பர்களான திருச்சியைச் சேர்ந்த சையது அபுதாகிர் மற்றும் வீரா ஆகிய இருவருடன் சேர்ந்து கடந்த 6ஆம் தேதி அப்துல் ரகுமான் மற்றும் அவரது மைத்துனர் ஷேக்பீர்ஹம்சா ஆகிய இருவரையும் கண்டுபிடித்து காரில் அழைத்துச் சென்று சென்னை தி.நகர்ப் பகுதியில் உள்ள விடுதியில் அடைத்து வைத்து, கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டு மிரட்டியுள்ளார்.
இதுமட்டும் அல்லாது, அப்துல் ரகுமானின் தந்தையிடம் தனது பணத்தைக் கொடுத்துவிட்டு மகனை அழைத்துச் செல்லுமாறு அயூப் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, அப்துல் ரகுமானின் தந்தை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்துல் ரகுமான் மற்றும் அவரது உறவினர் இருவரையும் மீட்டு சையது அபுதாஹிரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான அயூப் மற்றும் வீரா ஆகிய இருவரையும் போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.
முதல்வர் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது..!
தர்மபுரி மாவட்டம், மணிப்பூர் கிராமத்தைச் சார்ந்தவர் காளியப்பன் (27) நாம் தமிழர் கட்சி பிரமுகரான இவர் திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது சமூக வலைத்தளங்களில் தவறான பதிவு மற்றும் அவதூறு செய்திகளைப் பரப்பி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு செய்தி ஒன்றை அவரது 'X' தல பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதில், "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஆனால், அதில் தொடர்புடைய காவல் துறை உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு" என்று கூறி அவதூறு பரப்பும் வகையிலும் கேலி செய்யும் வகையிலும் கார்ட்டூன் படத்துடன் பதிவிட்டு உள்ளார்.
இதுகுறித்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது, இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் தகவல் தொழில் நுட்பச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காளியப்பன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதை அடுத்து தர்மபுரி மாவட்டத்திற்குச் சென்ற தனிப்படை போலீசார் அங்கு காளியப்பனைக் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: முத்துப்பேட்டை அருகே கொடூரம்.. 6 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்ட மூதாட்டி.. நடந்தது என்ன?