சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நகைக்கடையின் மேலாளர் சிவகுமார் என்பவரின் கடைக்கு கடந்த 10ஆம் தேதி நுங்கம்பாக்கம் காவல் துறையினர் எனக்கூறிக்கொண்டு இருவர் சென்றுள்ளனர்.
அப்போது நேபாள பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் பறிமுதல் செய்த நகைகள் அந்த சம்பந்தப்பட்ட தனியார் நகைக்கடையில் வாங்கப்பட்டது எனவும் அந்த இரண்டு காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அத்துடன், தாங்கள் நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவலர்கள் எனக்கூறிய இருவரும், ரூ.2 லட்சம் லஞ்சப்பணம் கேட்டுள்ளனர். அப்படி தராவிட்டால் முதல் தகவல் அறிக்கையில், கடையின் பெயரை சேர்த்து களங்கம் ஏற்படுத்துவோம் எனக் கூறி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதன்பேரில் குற்றப்பிரிவு காவலர்கள் மெல்வின் மற்றும் தங்கராஜ் ஆகிய 2 காவலர்கள், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரோகிணி ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி இன்று (ஆக.22) காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இச்சம்பவம் சென்னை காவல் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மலையை உடைத்து நொறுக்கிவிட்டால் அருவி ஏது...ஆறு ஏது...அரசுக்கு சீமான் கண்டனம்