நோய் நாடி நோய் முதல் நாடி என்கிறார் வள்ளுவர். ஒரு நோய்க்கான மருத்துவத்தை அதன் அடிப்படையில் கண்டடைவது தான் இதன் பொருளாகும்.
உலக நாடுகளை ஆக்கிரமித்திருக்கும் கரோனா தொற்று, எவ்வாறு மனித இனத்திற்குள் பரவத் தொடங்கியது என்பதே கேள்விக்குறியாக உள்ளது. வல்லரசு நாடுகளே ஆட்டம் கண்டுள்ள நிலையில், இந்தியா போன்ற நாட்டில் வாழும் மக்கள் கரோனா நோயை விட பசிக்கொடுமையால் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுதான் வேதனையை தருகிறது.
இந்தியாவில் 80 விழுக்காட்டினர் ஏழைகள் இருக்கின்றனர். இதில், முறைசாரா தொழிலாளர்கள், தினக் கூலிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் என அனைவரும் கரோனா தொற்றால் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். தொடர் ஊரடங்கால் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கால் முடங்கி கிடக்கும் ஏழை மக்களுக்கு அரசு தரப்பில் இதுவரை எதுவும் செய்யவில்லை என நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். இதனையே பொருளாதார நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். விளக்கு பிடிப்பதாலும், கைதட்டுவதாலும் ஏழை மக்களின் பசிக்கொடுமை தீர்ந்துவிடுமா என்பதை பிரதமர் மோடிதான் விளக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.
குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கடந்த 20 நாள்களாக கடுமையான நோய்த் தாக்கத்தால் மக்கள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னை முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வந்தால்தானே வேலைக்குச் செல்ல முடியும், சாப்பிட்டு இரண்டு நாள் ஆகுது. வெளியே போவதற்கும் வழியில்லை. அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் ஒருவாரத்திற்கு போதுமானதா இருக்கிறது. வாழவும் வழியில்லை, பசியை போக்க ஏதாவது மருந்து இருந்தால் தாருங்கள் அதை சாப்பிட்டு உயிர் வாழ்கிறோம் என கண்ணீருடன் தெரிவிக்கின்றனர் மக்கள்.
அவர்களது வலிகளை உணர்ந்து நண்பர்கள் மூலம் சமூக ஆர்வலர்கள் பலரும் உதவி வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த தம்பதியினர் பசியின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களின் பசியை போக்கி, இதனை ஒரு தொண்டாகவே செய்து வருவது பலரது பாராட்டை பெற்றுள்ளது. சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த தம்பதியர் டேனியல் ஜேக்கப் - ப்ரீத்தி டேனியல். மென்பொறியாளர்களாக பணியாற்றி வரும் இவர்கள், "யு ஆர் லவ்டு" (Your are Loved) என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்தத் தொண்டு நிறுவனம் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உதவி செய்து வருகிறார்கள்.
இளைஞர்கள் அனைவரும், ஒரு குடும்பமாக குழுவாக இணைந்து கண்ணகி நகர், பெரும்பாக்கம், சைதாப்பேட்டை போன்ற இடங்களில் வறுமையால் வாடும் குடும்பத்திற்கு வீடு தேடி மளிகைப் பொருள்களை வழங்கி, லவ் பண்டல் (Love Bundle) என்ற பெயரில் அன்பை விதைத்து வருகின்றனர். உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் கண்களில் நாங்கள் இருக்கிறோம் என நம்பிக்கை அளித்து வருகின்றனர். இந்த லவ் பண்டல், அவர்களது பசியை மட்டும் போக்கவில்லை, சக மனிதனை மனிதனாய் மதிக்கவும், சமத்துவத்தையும், மனிதத்தையும் இந்தச் சமூகத்திற்கு கற்றுக்கொடுக்கிறது.
இதுகுறித்து "யு ஆர் லவ்டு" தம்பதியினர் கூறுகையில், "கரோனா காலத்தில் பல நபர்கள் பசியுடன் இருப்பதை நாங்கள் அறிந்தோம். இதனால், அவர்கள் வீட்டுக்கு தேவையான மளிகை பொருள்களை வாங்கி தர வேண்டுமென பணியில் இறங்கினோம். முதலில் குடிசைப்பகுதி மற்றும் கிராமப்புற பகுதியில் வசிக்கும் சில குடும்பங்களுக்கு மட்டும் பொருள்களை கொடுக்க நினைத்தோம். அப்பகுதி மக்களை சந்தித்து பேசியபோது, நாங்கள் சாப்பிட்டு மூன்று நாள்கள் ஆகிறது என்று கண்ணீருடன் தெரிவிக்கும்போதுதான் உண்மை நிலவரம் தெரியவந்தது.
இதனால், அம்மக்களின் துயரம் போக்க உதவ வேண்டும், என்ற எண்ணத்தில் லவ் பண்டல் முறையை அறிமுகப்படுத்தினோம். லவ் பண்டல் என்பது ஒரு பைக்குள் அரிசி, பருப்பு எண்ணெய், மசாலா பொருள்கள் என அனைத்தும் இருக்கும். அந்தப் பொருள்களை வைத்து நான்கு பேர் கொண்ட குடும்பம் 15 நாள்களுக்கு சாப்பிடலாம். ஒரு லவ் பண்டலுக்கு முழுமையாக பொருள்கள் வாங்கும் செலவு 600 ரூபாய் தான். இதுவரை நாங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த பொருள்களை வழங்கியுள்ளோம்.
மக்களின் மத்தியில் இதை பெரிய அளவில் எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காக லவ் பண்டல் சேலஞ்ச் என்று சமூக வலைதளங்களிலும் பரப்பி வருகிறோம். மக்கள் யாரும் பசியோடு இரவு உறங்க கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம் எனவே பெரிய நிறுவனங்களும் இவ்வாறு மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்" என மன நெகிழ்வுடன் தெரிவித்தனர்.
150 தன்னார்வலர்களை பயன்படுத்தி தமிழ்நாடு உள்ள பல்வேறு கிராமப்புற பகுதிகளில் இச்சேவையை செய்து வரும் டேனியல் மற்றும் ப்ரீத்தி தம்பதியினர் பல குடும்பங்களின் பசியை போக்கி தானும் மகிழ்வுடன் வாழ்பவர்களை கடவுளுக்கு சமமாய் பார்ப்பதே நிதர்சனம். உண்மையில் இவர்கள் பசியை போக்கும் கடவுள்தான்.
இதையும் படிங்க: 'எனது கஷ்டத்தை வெளிக்கொண்டு வந்து, உதவி செய்த ஈடிவிக்கு ரொம்ப நன்றி'