தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும், கரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 672ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று (மே 20) மட்டும் 552 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் ஒன்றிணைந்து கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், சென்னையின் குடிசைப் பகுதிகளில் இலவச முகக் கவசங்கள் வழங்குவது, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கபட்ட வார்டுகளின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்பேடு வார்டில்தான் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த வார்டில் மொத்தம் 427 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தப்படியாக புளியந்தோப்பில் வார்டு எண் 77இல் 265 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து நெற்குன்றம், பெரிய மேடு, ஜார்ஜ் டவுன், கிருஷ்ணம்பேட்டை, ராயபுரம், பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட 34 வார்டுகளில் சென்னையில், கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 50 விழுக்காடு வசிக்கின்றனர் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : கோவிட்-19 பரிசோதனை குறித்து ஐ.சி.எம்.ஆர்.-ன் புதிய வழிமுறைகள்