சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, சாலைகள், பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் போன்ற வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று (11.10.2021) ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் .பி.கே.சேகர் பாபு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, அரசு முதன்மைச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள்
கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு ,"பெருநகர சென்னை மாநகராட்சியில் 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு 200 வார்டுகள் உள்ள நிலையில், ஒரு வார்டிற்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்ற அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த திட்டம் வகுத்து அதனை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டார்.
"பொதுமக்கள் பயன்படுத்த இயலாத உபயோகமற்ற நிலையில் உள்ள பொதுக்கழிப்பிடங்களை பராமரித்து புதுப்பிக்கவும், மேலும், புதிய கழிப்பறைகளை அமைக்கவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் எல்.இ.டி. தெருவிளக்குகளை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
உத்தரவு
தமிழ்நாடு முதலமைச்சர் நிதிநிலை அறிக்கையில் அறிவித்த கணேசபுரம் சுரங்கப்பாதையின் மேல் புதிய மேம்பாலம், ஸ்ட்ராஹன்ஸ் சாலை, குக்ஸ் சாலை, பிரிக்ளின் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை நான்கு முனை சந்திப்பில் புதிய மேம்பாலம், தெற்கு உஸ்மான் சாலை-சி.ஐ.டி. நகர் முதல் பிரதான சாலையில் மேம்பாலம் ஆகிய பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் நேரு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சிங்கார சென்னை 2.O
சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ் திட்டப் பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அமைச்சர் நேரு உத்தரவிட்டார்.