இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு காலத்தில், சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 27 ஆயிரத்து 195 சாலையோர வியாபாரிகளில் இதுவரை சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, கைபேசி எண், வங்கி கணக்கு போன்ற விவரங்களை வழங்கிய 14 ஆயிரத்து 633 சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணத் தொகையாக முதல் கட்டமாக ஆயிரம் ரூபாய், இரண்டாம் கட்டமாக ஆயிரம் ரூபாய் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது மூன்றாம் கட்டமாக சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதுவரை முதல் மற்றும் இரண்டாம் கட்டம் நிவாரணத் தொகை பெறாத பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள், பெருநகர சென்னை மாநகராட்சியால் தங்களுக்கு வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை (ஜெராக்ஸ்), கைபேசி எண், வங்கியின் பெயர், கிளை முகவரி, சேமிப்பு கணக்கு எண், கிளை குறியீட்டு எண், IFSC குறியீட்டு எண் போன்ற விவரங்கள் கொண்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் (ஜெராக்ஸ்) ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மண்டலத்தில் வழங்கும் பட்சத்தில் நிவாரணத் தொகையை தங்கள் வங்கிக் கணக்கில் மாற்ற இயலும்.
எனவே, இந்த வாய்ப்பை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் பயன்படுத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.