சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்களுக்குள்பட்டு 200 வார்டுகள் உள்ளன. இதற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கட்டட, நில உரிமையாளர்களிடம் சொத்து வரி, தொழில், வணிகம் சார்ந்து இயங்கும் கட்டடங்களில் தொழில் வரி, தொழில் உரிமம் வரி ஆகியவை வசூலிக்கப்பட்டுவருகிறது.
ஒவ்வொரு நிதியாண்டிற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வரி வசூலிக்கப்படுவதினால், சுமார் 900 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கின்றன. இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டு தொடங்கியதில் இருந்தே, கரோனா தொற்று அசாதாரண சூழல், அதனால் நடைமுறைப்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு போன்ற காரணங்களால் சொத்துவரி, தொழில் வரி வசூலிப்பில் அலுவலர்கள் தீவிரம் காட்டாமல் இருந்தனர்.
வரி கட்டுங்க!
தற்போது கரோனா இரண்டாம் அலை படிப்படியாகக் குறைந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், சென்னை முழுவதும் மீண்டும் தீவிரமாக வரி வசூலிக்கப்பட்டுவருகிறது. நடப்பாண்டின் முதல் அரையாண்டில் வரவேண்டிய 380 கோடி ரூபாய் தொழில் வரியில், தற்போது வரை 160 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
சுமார் 150 கோடி ரூபாய் தொழில் வரியில் 36 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சித் தகவல் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் வரிகளையும், நிலுவையில் உள்ள வரிகளையும் விரைந்து செலுத்த முன்வர வேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள்விடுத்துள்ளது.
நீண்டகாலமாக வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள நிறுவனங்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் நோட்டீஸ் அளித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியவர்களிடம் 3.35 கோடி அபராதம் வசூல்!