சென்னையில் 500க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இந்த தனியார் மருத்துவமனைகளில் கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைப் பெறுவோர் விவரத்தை, சில மருத்துவமனைகள் மாநகராட்சிக்கு அனுப்பவில்லை எனப் புகார் எழுந்த வண்ணம் இருந்தது.
அதுமட்டுமின்றி கரோனா சிகிச்சைக்குக் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைப் பெறும் நோயாளிகள் விவரத்தை நாள்தோறும் மாநகராட்சிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து அறிக்கை தயாரிக்கும் பணியைக் கண்காணிக்க 15 மண்டலங்களிலும் மண்டலத்துக்கு ஒரு அலுவலர் என 15 அலுவலர்களை மாநகராட்சி நியமித்துள்ளது.
மேலும், தினமும் அந்தந்த மண்டலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு நபர்கள் கரோனா அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்னும் விவரங்களை (gccpvthospitalreports@chennaicorporation.gov.in) என்ற மின்னஞ்சலுக்கு தினமும் அனுப்ப வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தவறான தகவலைத் தெரிவிக்கின்ற மருத்துவமனைகள், தகவல்களைத் தர மறுக்கும் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.