சென்னை: பாரிமுனை மூக்கர் நல்லமுத்து தெரு, அர்மேனியன் தெரு சந்திப்பில் தீபக் சந்தன், பாரத் சந்தன் ஆகியோருக்கு சொந்தமான பழைமையான கட்டடத்தைப் புதுப்பிப்பதற்காக, சுமார் 15க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு கடந்த இரண்டு மாதங்களாகக் கட்டடம் புதுப்பிக்கும் பணி நடந்து வந்த நிலையில், வழக்கம் போல நேற்று காலையும் பணிகள் நடந்து வந்தது
அப்போது சரியாக 10 மணி 15 நிமிடத்தில் நான்கு மாடிக் கட்டடம் முழுவதும் கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென பெரும் சத்தத்துடன் சரிந்து விழுந்துள்ளது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் அளித்ததன் பேரில் ஏழுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு உடன் மீட்பு பணி முடிவடைந்த நிலையில் எந்த ஒரு உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை எனத் தீயணைப்புத் துறையினரும் தேசிய மீட்பு துறையும் தெரிவித்தனர். இந்த கட்டிடம் இடிந்த சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர் தீபக் சந்தன் மற்றும் பாரத் சந்தன் ஆகியோருக்கு சென்னை மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
கட்டடம் பழுது பார்க்கும் பணிக்குச் சென்னை மாநகராட்சியின் முன் அனுமதி பெறாதது, பொதுமக்களுக்கு அபாயகரமான பாதிப்பு ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் பணியை மேற்கொண்டது போன்ற காரணங்களுக்காக, உரிய விளக்கத்தை உடனே அளிக்க வேண்டும் என நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விதிமீறல் காரணங்களுக்காக உரிமையாளர்கள் தீபக் சந்தன் மற்றும் பாரத் சந்தன் ஆகியோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கும் சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னையில் ஆபத்தான நிலையில் உள்ள பழமையான கட்டடங்களை பொதுப்பணித்துறை மூலம் ஆய்வு செய்வதற்குச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மேலும், பழமையான கட்டடங்களின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்து ஆபத்தான கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும். ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை மாநகராட்சியே இடிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.