சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் , 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இதில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த தேர்தலுக்காகச் சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் (பிப்.12) முதல் வீடு வீடாகச் சென்று சென்னை மாநகராட்சி பணியாளர்கள், வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டுகளை (booth slips) வழங்கி வருகின்றனர்.
இந்த பணியில், மொத்தம் 4 ஆயிரத்து 67 பேர் பணியாற்றி வருகின்றனர். மேலும், நேற்று முன்தினம் மட்டும் 10 ஆயிரத்து 730 வாக்குச் சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் சென்னையில் 61 லட்சத்து 70 ஆயிரத்து 356 வாக்குச் சீட்டுகள் வழங்கவேண்டும்.
இதனிடையே, இதுவரை 5 லட்சத்து 54 ஆயிரத்து 187 வாக்குச் சீட்டுகள் நேரடியாக வீட்டுக்குச் சென்று மாநகராட்சி வழங்கியுள்ளது. விரைவில் அனைவருக்கும் வாக்குச் சீட்டுகள் வழங்கி முடிக்கவேண்டும் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சமூக வலைதளங்களில் வெளியான தேர்வு வினாத்தாள் - மாணவர்கள் அவதி!