சென்னையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் அஞ்சல் வாக்கு எவ்வாறு சேகரிக்க வேண்டும், அதற்கான பொருள்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் முதலிய பயிற்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து அஞ்சல் வாக்கு சேகரிக்கச் செல்லும் வாகனத்தை பிரகாஷ் தொடங்கிவைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், கரோனா தொற்று ஏற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் என மூன்று பிரிவுகளுக்கு மட்டுமே அஞ்சல் வாக்கு அளிக்கப்படுகிறது. அஞ்சல் வாக்களிக்கும் படிவங்கள் 1,20,000 வழங்கப்பட்டது.
இதில் சில திருத்தங்கள், பிழைகள் காரணமாக நிராகரிக்கப்பட்டு 7,300 நபர்களுக்கு மட்டும் அஞ்சல் வாக்கு வழங்கப்பட்டது. இந்த அஞ்சல் வாக்கு உடையவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணி நாளை (மார்ச் 25) தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறும்.
அஞ்சல் வாக்கு சேகரிக்க 70 அணிகள் உள்ளன. அனைவரும் நேரடியாக வீட்டுக்குச் சென்று வாக்குகளைச் சேகரிப்பர். ஒரு அணி ஒரு நாளைக்கு 15 வாக்குகள் சேகரிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு குடும்பத்தில் இருக்கும் நபர்கள் உதவி செய்யலாம். அஞ்சல் வாக்கு உடையவர்களுக்கு இரண்டு முறை வாய்ப்பு வழங்கப்படும். அஞ்சல் வாக்கு அளிக்காதவர்கள் நேரில் சென்று வாக்களிக்கலாம். கரோனா சமயத்தில் பணிபுரிந்த தற்காலிகப் பணியாளர்களை மீண்டும் பணிக்கு எடுக்கவுள்ளோம்.
கரோனா பரிசோதனை மருத்துவ முகாம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 60 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடும் திறன் மாநகராட்சியிடம் உள்ளது. ஆனால் தற்போது 35 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுகிறது. எனவே மக்கள் தடுப்பூசி போட முன்வர வேண்டும்.
வேட்பாளர்கள் சிலருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதால் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது" எனத் தெரிவித்தார்.