சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக புதியதாக மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ள இடங்களில் முடிக்கப்படாத வண்டல் வடிகட்டி தொட்டிகளை உடனடியாக அமைக்கவும், ஏற்கனவே அமைத்துள்ள வண்டல் வடிகட்டி தொட்டிகளில் தேங்கியுள்ள வண்டல்களை அகற்ற ஒப்பந்ததாரர்களுக்கு இன்று (நவ.5) சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் உத்தரவிட்டுள்ளார்.
அதோடு, வண்டல் வடிகட்டி தொட்டி மற்றும் மழைநீர் வடிகாலுடன் இணைக்கும் குழாய் (Chute Pipe) பொருத்தப்படாத இடங்களில் குழாய் பொருத்தவும் (அ) தற்காலிக ஏற்பாடாக வேண்டிய இடங்களில் துளை இடவும், வண்டல் வடிகட்டி தொட்டிகளில் உள்ள திடக்கழிவுகளை அகற்றவும் மாநகராட்சியின் சாலைப்பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துமாறும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மழையின் காரணமாக சாலைகளில் எற்பட்டுள்ள சிறு பள்ளங்களை உடனடியாக சீர்செய்ய மாநகராட்சியின் பேருந்து சாலைகள் துறை அலுவலர்களுக்கும், சாலை மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள திடக்கழிவுகளை அகற்றும் வகையில் தீவிர தூய்மைப்பணி மேற்கொள்ளவு திடக்கழிவு மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அது மட்டுமின்றி, நடைபெற்று வந்த மழைநீர் வடிகால் பணிகளில் பருவமழையின் காரணமாக ஒரு சில இடங்களில் முடிக்கப்பெறாமல் நிறுத்தப்பட்ட மழைநீர் வடிகால் இணைப்புகளை உடனடியாக மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் போக்குவரத்து விதி மீறல் - ரூ. 1.88 கோடி அபராதம்