சென்னையில் உள்ள நான்கு மருத்துவ கல்லூரிகளில் கரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் நேற்று வரை ஆயிரத்து 458 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 226 பேர் சிகிச்சை பெற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஆயிரத்துக்கு 200க்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் சென்னை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். சென்னையில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.
இந்த சூழ்நிலையில் அரசு மருத்துவமனைகளில் படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் சாதாரண நோய் தொற்று உடன் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் மையங்களுக்கு மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தற்போது வரை புதிதாக 66 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 500 படுக்கைகள் உள்ள நிலையில் தற்போது 250 பேர் வரை இருக்கின்றனர் ஓரளவு ஆரோக்கியமாக உள்ள நபர்களை லயோலா கல்லூரிக்கு மாற்றி உள்ளனர்.
ஸ்டான்லி மருத்துவமனையில் இருப்பவர்கள் வைஷ்ணவா கல்லூரிக்கு மாற்றப்படுகின்றனர். அதேபோல் சென்னை நந்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட அரங்கிற்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அதேபோல் ராணிமேரி கல்லூரி, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி, விருகம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளிலும் தனிமைப்படுத்தும் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க...சென்னையில் தீவிரம் காட்டும் கரோனா: ஐடி, தொழில் நிறுவனங்கள், கட்டுமானம், கடைகள் திறப்பது குறித்த நிபந்தனை என்ன?