சென்னையில் பொது இடங்கள், மக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பகுதிகள் ஆகியவற்றைத் தூய்மையாக வைத்துக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதனடிப்படையில், எலியட்ஸ் கடற்கரையைத் தூய்மையாகப் பராமரிக்க 24 மணி நேரமும் பணியாற்றுவதற்காக 35 துப்புரவுப் பணியாளர்களை மாநகராட்சி நியமித்துள்ளது.
இன்று முதல் பணிகளைத் தொடங்கும் இவர்கள், எப்போதும் நகரும் குப்பைத் தொட்டிகளுடன் கடற்கரையில் இருப்பார்கள். பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளால் ஆங்காங்கே வீசப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை இவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தவுள்ளனர்.
மேலும், சுழற்சி முறையில் இவர்கள் 24 மணி நேரமும் பணியாற்றவுள்ளதால் இனி எலியட்ஸ் கடற்கரையைக் குப்பைகள் இல்லாத பகுதியாக காணமுடியும் என்று மாநகராட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். சுகாதாரப் பணியாளர்களால் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளைப் பிரித்தெடுக்க, கடற்கரையிலேயே குப்பைகளைப் பிரித்தெடுக்கும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை தொடர்ந்து பொதுமக்கள் பயன்படுத்தும் மற்ற சுற்றுலாத் தலங்களிலும் 24 மணி நேரம் பணியாற்றும் ஊழியர்களை நியமிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: குரூப் -1 தேர்வில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை - தேர்வர் அர்ச்சனா தகவல்