சென்னை தரமணி பகுதியைச் சேர்ந்தவர் ஷகூர் பானு. இவர் கடந்த சில மாதங்களாக தரமணி பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இதனைப் பார்த்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் இன்று ஷகூர் பானுவை நேரில் சந்திக்க அழைத்தார். வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலத்திற்கு வந்த ஷகூர் பானு ஏ.கே. விஸ்வநாதனை சந்தித்துப் பேசினார். அதையடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு மக்கள் சேவை ஆற்றிவருவதை ஆணையர் பாராட்டி, வெகுமதி வழங்கினார்.
பிறகு சென்னை காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசுவும் ஷகூர் பானுவை நேரில் பாராட்டி திருக்குறள் புத்தகத்தை பரிசாகக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து ஷகூர் பானு கூறுகையில், "ஒரு நாள் போக்குவரத்து நெரிசலில் நான் சிக்கிக் கொண்டேன். அதனை நானே ஒழுங்குபடுத்தினேன். அன்றில் இருந்து நானே காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டேன்.
போக்குவரத்து காவலர்கள் எனக்கு வெள்ளை உடை கொடுத்து உதவினர். பிறகு வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். கமிஷனர் என்னை அழைத்துப் பாராட்டி உள்ளார். அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியுங்கள். ஹெல்மெட் இல்லாமல் பயணம் செல்லாதீர்கள்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் சாலை விதிகளை பின்பற்றவுள்ள ராஜஸ்தான்!