சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று ஒருவர் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் போல டிக்கெட் கவுன்டர் அருகே நின்றபடி ரயிலில் ஏறும் பயணிகளிடம் டிக்கெட்டு பரிசோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். மேலும், ரயில் டிக்கெட் இல்லாதவர்களிடம், அவரிடம் இருந்த பயணச் சீட்டுகளை விற்று பணம் வசூலித்து கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பயணி ஒருவர் ரயில்வே காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்
இதனையடுத்து டிக்கெட் கவுன்டர் அருகே புறநகர் ரயில் டிக்கெட் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த அந்த நபரை ரயில்வே காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். விசாரனையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். அப்போது அவரது மேல் சந்தேகம் அடைந்து, அவரை தீவிரமாக விசாரத்ததில், ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த வெங்கட கிஷோர் (42) என்பதும், புறநகர் ரயில் டிக்கெட்டுகளை போலியாக அச்சிட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. குறிப்பாக வடமாநில நபர்களையே குறிவைத்து மாதம் ரூபாய். 30 ஆயிரம் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து வெங்கட கிஷோர் மீது குற்றம் நிருபிக்கப்பட்டு, ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
திமுக அமைச்சர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் விவகாரம்: திருச்சியை சேர்ந்த நபர் ஒருவர் அவரது குழந்தைக்கு உதவி தேவை படுவதால் திமுக அமைச்சர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த விவகாரம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று(அக்.19) இரவு தொலைபேசி மூலம் பெயர் விலாசம் தெரியாத நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அமைச்சர் கே.என்.நேரு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், நேற்று(அக்.19) இரவு மோப்பநாய் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் தொலைபேசி எண் மூலம் மிரட்டல் விடுத்த நபரின் விவரங்களை சேகரித்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அமைச்சருக்கு மிரட்டல் விடுத்தது திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பதும், அவரும் திமுகவின் உறுப்பினராக உள்ளார் என்பதும் தெரியவந்தது.
மேலும் மணிகண்டன் என்பவருக்கு திருமணம் முடிந்து மனைவி உயிரிழந்த நிலையில், ஓரு குழந்தை உள்ளதாகவும் இரு சிறுநீரக பிரச்சினை குறித்து திமுகவினர் பொருப்பாளர்களிடம் பல முறை உதவி கேட்டும் மதிக்காமல் போனதால், இந்த முறை கவனத்தை ஈர்க்க அச்சுறுத்தல் மிரட்டலாக அமைச்சர் கே என் நேருவின் வீட்டிற்கு பொய்யாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் காவல் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
லியோ திரைப்பட போலி டிக்கெட்: தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் லியோ படத்திற்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து ஒரு டிக்கெட் 1,500 ரூபாய் என்று விற்பனை செய்து வந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் வித்யா திரையரங்கம் மற்றும் குரோம்பேட்டை வெற்றி திரையரங்கம் உள்ளிட்ட திரையரங்குகளில் லியோ படம் வெளியாகியது. அப்போது திரையரங்கிற்கு வெளியே நின்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர், அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலையாக 1,500 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற காவல் துறையினர் அதிக விலைக்கு டிக்கெட் விற்றவர்களை விசாரணை மேற்கொண்டதில், அதிகவிலைக்கு டிக்கெட்டை விற்றது படப்பை பகுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் முடிச்சுர் பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பதும் தெரிய வந்தது. பின்னர் அதே போல குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தது வேளச்சேரியை சேர்ந்த தேவா என்பதும் தெரிய வந்தது.
இந்நிலையில் காவல்துறையின் விசாரணையின் போது மூவரும் வெவ்வேறு இடங்களில் உள்ள திரையரங்கில் அதிக விலைக்கு லியோ பட டிக்கெட்டை ரசிகர்களுக்கு விற்பனை செய்து வந்தது உறுதியானதையடுத்து, அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆறு லியோ பட டிக்கெட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
உடற்பயிற்சி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது: சென்னை வியாசர்பாடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் பள்ளியைச் சேர்ந்த உடற்பயிற்சி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வியாசர்பாடியைச் சேர்ந்த 15வயது சிறுமி ஒருவர் எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் (அக்.18) இரவு 10 மணியளவில், இவர் வீட்டிலிருந்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு மயக்க நிலையில் இருந்துள்ளார்.
தக்க சமயத்தில் இதை அறிந்த பெற்றோர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விசாரணையில் சிறுமி படிக்கும், அதே பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரியும் ஆல்பின் பிரேம்குமார் என்பவர், மாணவியுடன் பழகி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதனால் சிறுமி மன உளைச்சலுக்கு ஆளாகி அதிகமான மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காவிரி பிரச்சினையில், தமிழக அரசு தைரியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை