சென்னை வேளச்சேரியில் இருந்து தி.நகர் நோக்கி இன்று காலை மாநகரப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர்.
இறுதியாக பேருந்து தி.நகர் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தபோது மாணவர்கள் படிக்கட்டுகளில் இருந்து ஒவ்வொருவராக கீழே குதித்துள்ளனர். அப்போது அவர்களுடன் குதித்த பள்ளி மாணவர், பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து பேருந்து ஓட்டுநர் திருஞானசம்பந்தம் பேருந்தை நிறுத்தினார். உயிரிழந்த பள்ளி மாணவர் குறித்து சக மாணவர்களிடம் விசாரித்தபோது, அந்த மாணவரின் பெயர் சரண் (12) என்பதும், பனகல் பார்க் அருகே உள்ள ஒரு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்ததும் தெரிய வந்தது. பின்னர் இதுகுறித்து காவல் துறையினர் தகவல் கொடுக்கப்பட்டது.
பின் சிறுவன் சரணில் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாண்டிபஜார் போக்குவரத்துப் புலனாய்வு காவல்துறையினர் ஆதம்பாக்கம் பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் திருஞானசம்பந்தத்தைக் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ' பள்ளி நேரங்களில் கூடுதலாகப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது பெற்றோர் மற்றும் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. அதே நேரம் பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வலியுறுத்துவதும், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் பெற்றோர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கையில் உள்ளது' எனத் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: மாணவிகளை கிண்டல் செய்த 'ரோமியோ'வை காலணியால் விளாசிய பெண் போலீஸ்