கரோனா வைரஸ் தடுப்பு காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாத சம்பளம் வாங்குபவர், தனியார் நிறுவன ஊழியர்கள், தினக்கூலிவரை கடந்த இருபது நாள்கள் ஊரடங்கு உத்தரவால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானோர் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற சூழலில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, உதவும் வகையில் அயனாவரம் பகுதியில் உள்ள ஆதவன் பல்பொருள் அங்காடியில் ஆயிரம் ரூபாய் மதிப்பில் மளிகைப்பொருள்கள் கடனாக வழங்கப்பட்டுவருவதை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர். இங்கு வரும் வாடிக்கையாளர்கள் கையில் இருக்கும் பணத்தைக் கொடுத்து பொருள்களை வாங்கிச் செல்லலாம். பணம் இல்லை என்றால் அடுத்த மாதம் தரலாம் என அறிவித்துள்ளனர்.
மேலும் பொருள்களை வாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள் இங்கு வந்து மளிகைப் பொருள்களை வாங்கிச் சென்று தங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.
இதுவரை சுமார் 450-க்கும் மேற்பட்டவர்கள் கடனாக மளிகைப் பொருள்களை வாங்கிச் சென்றுள்ளனர். கோயம்பேடு சந்தையிலிருந்து ஆறு மணி நேரம் காத்திருந்து பொருள்களை வாங்கி வர வேண்டும். மேலும், அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. இருப்பினும் லாப நோக்கமின்றி இந்தச் சமயத்தில் சேவை நோக்கத்துடன் வழக்கமான விலையில் பொருள்களை விற்பனை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: கோவிட்-19 பாதிப்பிலிருந்து கேரளா முழுவதுமாக விடுபடவில்லை: சுகாதாரத் துறை அமைச்சர் கவலை