சென்னை: தர்மபுரி அரூரை சேர்ந்த சக்தி வடிவேலன் (35), ஆடிட்டரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி செல்சியா (25) மார்பில் ஒரு கட்டி இருந்ததால், அது குறித்து ஆலோசனை செய்ய நேற்று (ஜூலை 15) இருவரும் தர்மபுரியில் இருந்து சென்னைக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் வந்து இறங்கினார்கள்.
கணவரை கடத்தல்
நண்பர் ஒருவரை பார்த்து விட்டு வருவதாக கூறிய சக்திவடிவேலன் தனது மனைவியை பஸ் நிலையத்தில் அமர வைத்துவிட்டு சென்று விட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில், அவரது மனைவியின் செல்போனை தொடர்பு கொண்ட நபர் கணவரை கடத்தி விட்டதாகவும் ரூ.25 லட்சம் தந்தால் விடுவிப்பதாக கூறி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்சியா பெருநகர சென்னை காவல் கமிஷனர் அலுவலகத்தில் நேரடியாக சென்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் துணை கமிஷனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் செல்போன் சிக்னலை வைத்து குன்றத்தூர் அடுத்த மலையம்பாக்கத்தில் உள்ள ஒரு கம்பெனியில் இருந்த சக்திவடிவேலன், அவரை கடத்தி வைத்திருந்த ஸ்டாலின் (40), கருப்பையா (62), வினோத்குமார் (47), ஆகிய மூன்று பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
விசாரணை
விசாரணையின் போது, “சக்திவடிவேலன் ரூ.2 லட்சம் வரை பெரிய சாமி என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். பெரியசாமி தொழிலதிபரான ஸ்டாலின், கருப்பையா ஆகியோரிடம் கடன் வாங்கி வட்டிக்கு பணம் கொடுத்து வந்தது தெரியவந்தது.
சக்தி வடிவேலன் வாங்கிய ரூ.2 லட்சத்துக்கு பெரியசாமிக்கு வட்டி தராமல் தொழில் தொடங்க போவதாக கூறி மீண்டும் ரூ.1 லட்சம் ரூபாயை பெரியசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு பெரியசாமி 1 லட்சம் ரூபாய் தருவதாக கூறி கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சக்தி வடிவேலனை வரவழைத்து காரில் கருப்பையா, பெரியசாமி, வினோத்குமார், ஸ்டாலின் ஆகியோர் திட்டம்போட்டு கடத்தி உள்ளனர்.
குறிப்பாக சக்திவடிவேலனிடம் அதிக சொத்துகள் இருப்பதாகவும், கடத்தி 25 லட்சம் ரூபாய் கேட்டால் கிடைத்துவிடும் என எண்ணி பெரியசாமி கொடுத்த ஐடியாவால் கருப்பையா, வினோத்குமார், ஸ்டாலின் ஆகியோர் இணைந்து குன்றத்தூரில் உள்ள ஸ்டாலின் நிறுவனத்தில் சக்தியை அடைத்து வைத்து மிரட்டியது” தெரியவந்தது.
மேலும் இதற்கு மூளையாக செயல்பட்ட பெரியசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கணவன் கடத்தப்பட்டதாக புகார் அளித்த சில மணிநேரங்களில் துரிதமாக செயல்பட்டு கடத்தப்பட்டவரை மீட்டு கொடுத்த காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிகின்றன.