சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, மானிய கோரிக்கை குறித்து விவாதித்தார். அப்போது பேசிய அவர், "உணவு பழக்கத்தாலும் வாழ்க்கை முறையாலும் தொற்று நோய்களால் இளைய தலைமுறையினர் பாதிக்கப்படுகின்றனர். சிகரெட் அட்டைகளில் எச்சரிக்கை வாசகம் இருப்பது போல உணவு பொருட்களின் அட்டைகளில் கலோரிகள், சர்க்கரை அளவு போன்ற பல்வேறு அம்சங்கள் வாசகங்களாக இடம் பெறவேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் பழனிசாமி, "அது போன்ற வாசகங்கள் இடம்பெற்றால் யாரும் ஹோட்டல்களுக்கு சென்று உணவருந்த மாட்டார்கள். இதனை அனைவரும் ஏற்றுக்கொண்டால் உங்கள் அறிவுரை நடைமுறைப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பூங்கோதை, "இளம் தலைமுறையினர் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். நீரிழிவு மார்பக புற்று நோய்கள் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "நீரிழிவு மார்பக புற்றுநோய் குறித்து ஆரம்ப சுகாதார நிலையம் முதல் வீடுகளுக்கே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதுகுறித்து பள்ளிகளில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்" என்றார்.